Friday, 8 December 2017

இந்து மதம்

                         



மிக தெளிவாக ஒரு உண்மையை உரத்து கூறிய அண்ணன் திருமா அவர்களுக்கு கோடி வணக்கங்கள் .இதனை t பெரியார் முதல் நாடு முழுவதும் உள்ள பகுத்தறிவாளர்கள் முன்னெடுத்து இருந்தால் இன்று உள்ள அவல நிலை ஏற்பட்டிருக்காது.இந்து மதம் தொன்மையான மதம்,சுயம்புவாக உருவான மதம்,மிஷனரிகள் உதவியின்றி தன்னால் பல ஆயிரம் மைல் பரப்பளவில் பரவிய மதம்,எந்த மதத்தையும்,கோவிலையும் அழிக்காத ,ஆக்கிரமிக்காத மதம் என்ற பச்சை பொய்கள் பல கோடி மக்கள் உள்ளத்தில் உண்மையாக பதிந்திருக்காது.
இந்து மதம் எங்கு தோன்றியது,எப்படி பரவியது என்று கொஞ்சம் விளக்க முற்பட்டால்,.உண்மையாக அறிந்து கொள்ள முயற்சித்தால் எது இந்து கடவுள்கு,எது ஆட்டையை போடப்பட்டு உள்ளே இழுக்கப்பட்ட கடவுள் @குறுந்தெய்வம் ,பெரிய தெய்வம்,தெய்வத்தில் உயர் வர்ணம்,கீழ் வர்ணம் எல்லாம் எளிதில் விளங்கி விடும்
பெரும்பான்மை மக்களின் உணவான மாமிச உணவை படைக்க முடியாத தெய்வங்கள் எல்லாம் பெருந் தெய்வம்.தான் சாப்பிடும் உணவுகளை படைக்க முடிந்த தெய்வங்கள் குறுந்தெய்வங்கள் என்று எளிதாகவும் பொருள் கொள்ளலாம்.உள்வாங்கப்பட்ட கடவுள்கள்,சிலைகளின் தொன்மையை இந்து மதத்தில் ஏறி கொள்ளும் அற்புதமான டெக்னீக் மிகவும் பிரமிப்பூட்டும் ஒன்று
மதம் என்பது கட்சி மாதிரி.இப்போது எங்கோ தோன்றிய பாஜக இரண்டு இடங்களில் இருந்து பெருகி ஆட்சியை பிடிக்கவில்லையா.அது போல த்தான் இந்து மதமும் வளர்ந்தது .ஜனதா தள் கட்சியோடு கூட்டணி வைத்து வெற்றி பெற்ற பிறகு அந்த கட்சியில் பெரும்பகுதியை விழுங்கியது .அதனால் விழுங்க முடியாத கட்சியினர் (லாலு,முலாயம் போல )புத்த மதம் போல
இப்போது அதிமுகவை விழுங்குவது போல முன்பு தென்னகத்தில் இருந்த மதங்களை விழுங்கியது.சிலரை வில்லனாக்கும்.எம் ஜி ஆர் ,ஜெயலலிதா போன்றோரை குறுந்தெய்வங்களாக மாற்றும். இதே போல வங்காளம் முதல் மணிப்பூர் வரை நடந்தால் அது தான் இது மதம் பரவிய கதை.எங்கு யாரை குறுந்தெய்வங்களாக ஆக்கினாலும் சாவர்க்கர்,ஹெட்கேவார்,கோல்வால்க்கர் தான் முப்பெரும் பெருந் தெய்வங்கள்.அவர்கள் தான் சுப்ரீம் .இதே தான் இந்து மதம் என்று இன்று அழைக்கப்படும் மதத்திலும் நடந்தது
ஆதிசேஷனும் புத்த மதத்தில் இருந்து ஆட்டையை போட்டது தான்.பிள்ளையார் வழிபாடு,முருகர் வழிபாடு ,எல்லம்மா,போச்சம்மா,பச்சம்மா ,கடம்பாடி அம்மா வழிபாடுகளை காளி ,அம்பாள் என்று தொடர்ந்து ஆட்டையை போடுவதை மிக ஆழமாக,அர்ப்பணிப்பு உணர்வு,கடின உழைப்பின் மூலம் இந்து மத மிஷனரிகள் காலகாலமாக செய்து வருகிறார்கள்.
உறவுக்குள் திருமணம் என்றால் வெட்டு கொலை எனும் கூட்டத்தையும்,உறவுக்குள் திருமணம் செய்யவிட்டால் வெட்டு கொலை எனும் நேர்மாறான கூட்டத்தையும் ஒன்று தான் என இணைக்கும் வலைப்பின்னல்கள் உண்மையில் மிகவும் ஆச்சரியப்படுத்தும் அதிசய வைக்கும் சாதனைகள் தான் .
கோவிலை ஆட்டையை போட்டாலும் பழங்குடி சடங்குகள் ,புத்தமத வழிபாட்டு முறைகளை,மொட்டை அடிப்பதை மக்கள் தொடர்ந்து தான் வந்தார்கள்.அவர்கள் கடவுள்களின் பெயராக சொல்லி வந்த பெயர் வேறு. மிக அழகாக அப்பண்ணா சாமி என்று வழிபடப்பட்ட கடவுள் வராக லட்சுமி நரசிம்மர் என்று வாயில் நுழையாத பெயராக மாற்றப்பட்டு ஆட்டையை போடப்படுவார்
முருகர் எனும் கடவுள் சுப்பிரமணியர் , ஷ்ரவன் ஆகி அவருக்கு தாய் தந்தை அண்ணன் எல்லாம் முளைப்பார்கள்.மொட்டை அடிப்பது தவறு,வீட்டில் இறப்பு ஏற்பட்டால் நடைபெறும் ஒன்று எனும் கூட்டத்தையும் ,கடவுளுக்கு காணிக்கையாக மொட்டை அடிக்கும் கூட்டமும் ஒன்று தான் ,ஆனால் ஒன்று மேல் வர்ணம் இன்னொன்று கீழ் என்று நிறுவ தொடர்ந்து நடந்து வரும் முயற்சி தான் இந்து மதம்
புத்தர் சிலைகள் பல நாடுகளில் உண்டு.அவற்றின் தொன்மை இந்து கடவுள்களை விட பல நூறு ஆண்டுகள் முந்தையது என்பதும் தெளிவான நிரூபிக்கப்பட்ட ஒன்று.
இப்போது தான் இஸ்லாமிய  மத வெறியர்களால் பாமியன் புத்தா சிலைகள் உடைக்கப்பட்டன.அவை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இஸ்லாமியர் அதிகமாக வாழும் பகுதிகளில் இருந்தன.காஸ்மீரிலும் மிக பழமையான புத்தர் சிலைகள் இன்றும் உண்டு.
ஆனால் புத்த மதம் தழைத்து ஓங்கிய ஒரிசா,தென்னகத்தில் ஒன்று கூட கிடையாது.அவை அனைத்தும் இந்து கோவில்களாக மாற்றப்பட்டு விட்டன.
அஜந்தா குகை கோவில்கள்,கனேறு குகை கோவில்கள் என அனைத்தும் புத்த மதத்தை சார்ந்தவை தான்.அவற்றுள் இந்து கடவுள்களை வைக்கும் வேலை பின்பு நடந்த ஒன்று ..
உருவ வழிபாடு இருப்பதால் எளிதாக பழங்குடி தெய்வங்களை ,புத்த சிலைகளை இந்து மிஷனரிகள் ஆட்டை போட்டார்கள்.இவர் இவருக்கு மகன்,இவர் இந்த இந்து கடவுளுக்கும் இந்த இந்து கடவுள் பெண் வேடம் போட்ட போது நடந்த பாலியல் வன்முறையால் பிறந்தவர் அய்யப்பன் .
காமவெறி தலைக்கேறி இந்து கடவுள் பெண்ணை துரத்தும் சிதறிய விந்துக்களால் பிறந்தவர் அய்யனார் என்று எல்லாம் மிக அழகாக இந்து மிஷனரிகள் வலைபின்னியதால் உருவானது தான் இன்றைய இந்து மதம்.
முதலில் இந்த ஆதாம் ஏவாள் உருவாக்கத்தில் இருந்து வெளி வர வேண்டும்.அந்தமானில் இருக்கும் ஒவ்வொரு தீவுக்கும் ஒவ்வொரு மொழி,ஒவ்வொரு கடவுள்.ஒரே இனமாக அறியப்பட்டாலும் இது நாகா இன மக்களுக்கும் பொருந்தும்.பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு எங்கும் இதே நிலை தான்.
எல்லா மதங்களும் ,கடவுள்களும் ஏதோ ஒரு இடத்தில உருவாக்கப்பட்டு பிற பகுதிகளுக்கு கொண்டு மிஷனரிகளால் கொண்டு செல்லப்பட்டன.இது கிருத்துவம் இஸ்லாம்,இந்து மதம் என அனைத்துக்கும் பொருந்தும்.இல்லை இந்து மதம் சுயம்புவாக உருவான மதம்,கடவுளே குறிப்பிட்ட பகுதியில் வாழ்ந்த மக்களை நேரடியாக இந்துவாக தேர்ந்தெடுத்தார் என்று நம்புபவர்கள் வேண்டுமானால் இந்து மதத்தின் தொன்மையை பற்றி பேசலாம் .உலகில் இயேசு,நபி அவர்கள் தேவ தூதர்களாக தங்களை உருவகப்படுத்தி மதங்களை உருவாக்குவதற்கு முன்பு இருந்த அனைத்து கடவுள்கள்,வழிபாடு முறைகள் இந்து மதம் என்று சொல்வதை விட அதிக நகைச்சுவை இருக்க முடியுமா
யார் இந்து என்று கேட்டால் யார் யார் இஸ்லாமியர்,கிருத்துவன் இல்லையோ அவர்கள் அனைவரும் இந்து என்ற விசித்திரமான விளக்கம் இன்றும் கிடைக்கும்.இதைய அடிப்படையாக வைத்து தான் இந்து மதம் அதன் தொன்மை பற்றிய கதைகள் எல்லாம்
இந்து மதம்,சமஸ்க்ரிதம் இரண்டுமே அவர்களின் மீது ஏற்றி வாய்க்கப்படும் தொன்மைக்கு தொடர்பே இலலாதவை
அகழ்வாராய்ச்சியில் பல்வேறு பகுதிகளில்கிடைத்த சிலைகள்,புத்த விகாரங்கள் இந்து கடவுள் சிலைகள்,கோவில்களை விட பல நூறு ஆண்டுகள் தொன்மை வாய்ந்தவை என்பது தான் இன்றுவரை உள்ள ஆராய்ச்சி முடிவுகள்

Thursday, 1 October 2015

மதுவிலக்கு

  மதுவிலக்கு ஆதரவாளர்களே
தயவு செய்து மதுவிலக்கு இருப்பதால் உடல்நலம்,கல்வி,போன்றவற்றில் சிறந்த நிலையை அடைந்து இருக்கும்,மனித உரிமைகளை மதிக்கும் ,ஆண்களையும் பெண்களையும் சமமாக மதிக்கும் ஒரு நாட்டை,மாநிலத்தை,சமூக குழுவை காட்டுங்களேன்.
மதுவிலக்கு இருக்கும் நாடுகளோடு,மாநிலங்களோடு மதுவிலக்கு இல்லாத நாடுகளில் மேற்கூறியவற்றை ஒப்பிட்டு பார்த்தால் மலைக்கும் மடுவுக்கும் இருக்கும் வித்தியாசம் தான் தென்படுகிறது.
மதுவிலக்கு இருக்கும் குஜராத்தில் தான் கலவரங்கள்,படுகொலைகள் மிக மிக அதிகம். எங்கோ வன்முறை நிகழ்ந்தால் மாநிலம் முழுவதும் தேடி தேடி கொள்வது நடக்கும் மாநிலம்.
மதுவிலக்கு இருக்கும் பாகிஸ்தானும் இதே போல தான்.மதுவிலக்கு இருக்கும் மாநிலங்கள்,நாடுகளோடு ஒப்பிட்டு சான்றுகளோடு வாதிடலாம்.இந்தியாவில் ராணுவ ஆட்சி இன்றுவரை வராமல் இருக்க மதுவும் முக்கிய காரணம்.
லவ் ஜெஹாத்,பெண்களை ஏமாற்றி திருமணம் செய்கிறார்கள் என்று பேசும் கூட்டமும்,மதுவை வைத்து மக்களை முட்டாள் ஆக வைத்து இருக்கிறார்கள், மதுவை விட பெரிய தீமை/கேடு கிடையாது என்று பேசும் கூட்டமும் ஒன்று தான். பெண்கள் சுயமாக முடிவாக எடுக்க மாட்டார்கள்,மனிதர்களுக்கு சுயமாக எவ்வளவு குடிக்க வேண்டும் அல்லது குடி தவறு என்று முடிவு எடுக்க தெரியாது.எங்களுக்கு அந்த அதிகாரம் வேண்டும் என்ற காலம் மலையேறி விட்டது.
காவல்துறை மது அருந்துபவர்களையும்,அவர்களின் குடும்பங்களையும் ,பக்கத்து மாநிலத்தில் சட்டப்படி சரி என்று விற்கப்படும் மதுவை எடுத்து கொண்டு வருபவர்களையும்,அப்படி வருகிறார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தனக்கு வேண்டாதவர்களின் மீது வன்முறையையும் ,அத்து மீறலையும் நடத்துவதை தவிர வேறு எதற்கும் மதுவிலக்கு உதவாது.
தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டு கொள்வதற்கு சமம் தான் காவல்துறையினருக்கு தரப்படும் அளவுக்கு அதிகமான அதிகாரம்.
பக்கத்துக்கு மாநிலத்தில் இருந்து மாட்டு கறி எடுத்து வந்தால்,வீட்டில் மாட்டு கறி சமைத்தால் ஐந்து ஆண்டு சிறைத்தண்டனை என்பதை எதிர்த்து கொண்டே பக்கத்துக்கு மாநிலத்தில் விற்கப்படும் மதுவை வாங்கி வந்தால்,இங்கு வந்து குடித்தால் சிறை தண்டனை என்பதை எப்படி சில மனிதஉரிமை ஆர்வலர்களால் ஆதரிக்க முடிகிறது
அடுத்தவர்களுக்காக முடிவு எடுப்பதை எப்போது தான் விட போகிறோமோ.மத வெறி,சாதிவெறி,மொழிவெறி பிடித்தவர்கள் தான் அடுத்தவனின் உரிமையில் தலை இடுவார்கள்.அவனுக்கு எது சரி,தவறு,எதை சாப்பிட கூடாது,எதை குடிக்க கூடாது என்ற உரிமையை எடுத்து கொள்வார்கள்.

தியாகி சசி பெருமாளும் தருமபுரி நாகராஜனும்


              மரணத்தை அடிப்படையாக வைத்து,இறந்த உடல்களை வைத்து நடக்கும் வன்முறைகள்,வெறியேற்றும் செயல்களை பற்றி எழுத வேண்டிய சூழல் வருத்தம் தருகிறது,தன் மகள் வேறு சாதியை சார்ந்த ஒருவனை காதலித்து அவனை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து சென்று விட்டதை பெரும் தீங்காக/கேடான செயலாக நினைத்து தன் உயிரை மாய்த்து கொண்டார் நாகராஜன்.அவரின் இறப்பை வெறியேற்ற பயன்படுத்தி கொண்ட கூட்டம் ஆடிய ஆட்டத்திற்கும் சசிபெருமாள் அவர்களின் இறப்பிற்கு பிறகு நடந்த/நடக்கும் வெறி ஆட்டங்களுக்கும் துளி கூட வித்தியாசம் கிடையாது.
ஒட்டு போடும் உரிமை கொண்ட,அரசை தேர்ந்தெடுக்கும் உரிமை கொண்ட,அரசியலில் போட்டி போடும் வயதை அடைந்த,தான் விரும்பிய படிப்பை படிக்கும் உரிமை கொண்ட ஒருவர் தனக்கு பிடித்த உணவை(மாட்டு கறியை),திரவத்தை(மதுவை )குடிக்க கூடாது.அதை தடை செய்ய வேண்டும். உலகின் மிக பெரும்பாலான பகுதிகளில் சட்டப்படி விற்க/குடிக்க அனுமதிக்கப்பட்ட திரவத்தை சில நூறு சதுர மைல் பரப்பளவில் வைத்திருக்க கூடாது.வைத்திருந்தால் கடும் தண்டனை தர வேண்டும் என்று போராடுவது எந்த அடிப்படையில் என்று எவ்வளவு யோசித்தாலும் விளங்கவில்லை.
பணியில் இருந்த டாஸ்மாக் ஊழியரை படுகொலை செய்ததை வெகு எளிதாக கடந்து செல்லும் கூட்டம் தர்மபுரியில் வெறியாட்டம் அடியவர்களை விட எந்த விதத்தில் வித்தியாசபடுகிறது.நாளை வேறு சாதியில் திருமணம் செய்வதை தடை செய்ய வேண்டும் என்று பலர் போராட கூடும்.அதற்கு ஆதரவாக பல அரசியல் கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு அரசு உடனே காதல் திருமணங்களை தடை செய்ய வேண்டும் என்று போராடும் நாள் வெகு தொலைவில் இல்லை.
மதுவினால் தமிழ்நாடே அழிந்து வருகிறது என்று எந்த வித சான்றுகளும் இல்லாமல் அடித்து விடும் கூட்டத்திற்கும் லவ் ஜெஹாத்,நாடக காதல் ,தமிழ்நாட்டின் மிக பெரிய பிரச்சினை,பெண்கள்,குடும்பங்கள் சந்திக்கும் மிக பெரிய பிரச்சினை இது தான் என்று அடித்து விட்டு வெறியேற்றி ,வன்முறை வெறியாட்டங்கள் ஆடி கொலை செய்து சாதி தலைவர்களாக மின்னுபவர்களுக்கும் இடையே சிறுதளவு வித்தியாசம் கூட கிடையாது.மதுவிலக்கு இருக்கும் நாடுகள் ,மாநிலங்களோடு ஒப்பிட்டு பார்த்து சான்றுகளை வைத்து பார்த்தால் முகத்தில் அரையும் உண்மை என்ன என்று சற்றே சிந்தித்து பார்த்தால் ஏன் இப்படி பொய் உரைக்கிறோம் என்ற குற்ற உணர்ச்சி சிறிதளவு நியாய சிந்தனை இருந்தாலும் வரும்.ஆனால் ....

சுந்தர் பிச்சை சத்யா நாடெல்லா முகேஷ் அம்பானி அண்டிலியா மாளிகை இட ஒதுக்கீடு


இட ஒதுக்கீடு, பெரியார், திராவிட இயக்கம் என அனைத்தும் இந்த நிகழ்வுகளோடு தொடர்பு படுத்தப்பட்டு வன்மம் கொட்டபடுவதால் சில விளக்கங்கள்.முதலாவதாக சுந்தர் பிச்சை அவர்களுக்கு வாழ்த்துக்கள்
அளப்பரிய சாதனை என்று பலரும் மூச்சு விடாமல் கத்துவதால் என்ன சாதனை செய்தார் என்று தேடி தேடி பார்த்தும் ஒன்றும் கண்ணுக்கு தென்படவில்லை. கண்டுபிடித்தவர்கள் தயவு செய்து சாதனை என்ன என்று விளக்கவும்.
மிக அதிக சம்பளம் தரும் பதவி கிடைத்தது பெரும் சாதனையா
உலகின் பணக்கார நிறுவனத்தின் CEO பதவி பெறுவது பெரும் சாதனையா
அந்த நிறுவனம் CEO பதவி காட்டி அழைக்கிறது ,இந்த நிறுவனம் இரண்டு மடங்கு சம்பளம் என்று ஆசை காட்டுகிறது ,நீ என்ன சொல்கிறாய் என்று பதவி பெறுதல் பெரும் சாதனையா
என்னோடு பணி புரியும் ஒருவர் திருமணம் செய்து கொள்ள போகும் பெண்ணின்(பெற்றோருக்கு ஒரே மகள்) தந்தைக்கு குர்கானில் பல ஏக்கர் சொத்து இருக்கிறதாம்.அதன் மதிப்பு ஆயிரகணக்கான கோடிகளாம்.அவருக்கு அனைவரும் வாழ்த்துக்கள் கூறினோம்.பெரும் பணக்காரர் ஆகும் அவரும் பெரும் சாதனையாளரா
அவரையும் பணம் வைத்திருந்த மாமனார் உலகெங்கும் தேடி வலைவீசி தகுதியானவன்,திறமையானவன்,இந்த உலகத்திலேயே தன் மகளுக்கு ஏற்றவன்,பொருத்தமானவன் என்று தான் பிடித்தார்,லார்ரி பேஜ் திரு சுந்தர் அவர்களை பிடித்தது போல.இரண்டுக்கும் இடையே எந்த வித்தியாசமும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. இருக்கிறது என்று எண்ணுபவர்கள் தயவு செய்து விளக்கினால் தன்யனாவேன்
ராஜாவின் மகன் ராஜா எனபது போல பெரும் நிறுவனங்கள் முதல் சிறு கடைகள் வரை வாரிசுகள் தலைமை பொறுப்புக்கு வந்து கொண்டிருந்தார்கள்.நம் டாட்டா,பிர்லா,அம்பானி மட்டுமல்ல உலகெங்கும் இதே நடைமுறை தான். இந்த பழக்கத்திற்கு மக்கள் இடையே மயக்கம் குறைந்து விட்டதை அறிந்ததால் யானை கையில் மாலையை கொடுத்து தேர்ந்தெடுக்க வைத்த வழக்கத்தை கையில் எடுத்திருக்கிறார்கள். என்னவொன்று தேர்ந்தெடுக்கும் யானை,அல்லது யானைகள் ஆறறிவு பெற்ற தேர்தெடுக்கபடும் மனிதரால் தனக்கு என்ன பயன் என்று பார்த்து தேர்வு செய்யும் யானைகள்.குறிப்பிட்ட ஒருவர் அல்லது யுவர் சேர்ந்து தேர்தெடுக்கும் செயல் தகுதிக்கும்,திறமைக்கும் எடுத்துக்காட்டு என்பதை விட மேற்கூறிய இரண்டையும் அதிகமாக இழிவுபடுத்த முடியாது.
மகன்களுக்கு உள்ளேயே யார் சிறந்தவர்,தனக்கு அடங்கி நடப்பவர்,தன் வழியை பின்பற்றுபவர் என்று பார்த்து ஒரு தொழில் அதிபர் எடுக்கும் முடிவுக்கும் இருவர்,மூவர் குழு எடுக்கும் முடிவுக்கும் என்ன வித்தியாசம்.இதில் உலகிலேயே சிறந்தவர் என்பதால் கிடைத்த பதவி என்று வாய்கூசாமல் வாதாடுபவர்களை பார்த்தால் சிரிப்பு தான் வருகிது.
இங்கேயே அவர் உயர்பதவியை அடைந்திருப்பார் இட ஒதுக்கீடு இல்லாவிட்டால் என்று வன்மம் கக்கும் கூட்டம் தான் அளப்பரிய சாதனை,நாடே பெருமைப்பட வேண்டிய சாதனை என்று அடித்து விட்டு கொண்டிருக்கிறது . இவர்கள் சொல்வதை பார்த்தால் இந்தியாவில்,தமிழ்நாட்டில்,உயர் கல்வி நிறுவனங்களில்,பொது துறை நிறுவனங்களில்,அரசு உயர்பதவிகளில்,தனியார் துறை உயர்பதவிகளில் ,பெரும்பாலான இடங்களை பெற்று இருப்பவர்கள் இட ஒதுக்கீடு பெரும் சாதிகளை சேர்ந்தவர்கள் என்று தான் அவர்களை படிப்பவர்கள் எண்ணுவார்கள்.உண்மைக்கும் இதற்கும் காத தூரம்.மேலே சொல்லப்பட்ட அனைத்து பதவிகளிலும் 1947 முதல் இன்று வரை மிக மிக பெரும்பான்மையான CEO /அதற்க்கு ஈடான பதவிகள் இட ஒதுக்கீடு பெறாத சாதிகளை சேர்ந்தவர்களுக்கு தான் சென்றுள்ளன.
அமெரிக்காவோ ஆப்ரிகாவோ படித்தவர்களோ,படிக்காதவர்களோ சென்று பணி செய்வதை முழுமனதோடு வரவேற்பவன் நான். ஆனால் இங்கு இட ஒதுக்கீடு காரணமாக தான் வேறு வழி இல்லாமல் வெளிநாடுகளுக்கு செல்கிறார்கள் என்ற பொய் முழுக்க முழுக்க வன்மம் தான்.சில தலைவர்கள் தான் இந்தியா ஓரளவாவது முன்னேற காரணம் ,ஒன்றாக இருக்க காரணம் என்று அவரவர் அவரவர்களுக்கு பிடித்த தலைவர்களை தூக்கி பிடித்தாலும் இந்தியா ஒன்றாக இருக்க ,ஓரளவாவது முன்னேற மிக முக்கிய காரணம் இட ஒதுக்கீடு தான். அதற்காக பாடுபட்ட தலைவகளும்,தொண்டர்களும் தான் என்பதை எவ்வளவு மறைக்க பார்த்தாலும் மறையாது.
முகேஷ் அம்பானி உலகத்திலேயே அதிக செலவில் ஒரு மாளிகை கட்டினார். அவர் பணம் ,அவர் கட்டி கொண்டார்.அதை பெரும் சாதனை ,இந்தியர்கள் அனைவரும் பெருமிதம் கொள்ள வேண்டிய சாதனை என்று கொண்டாட வேண்டும் ,அப்படி கொண்டாடாதவர்கள் சாதி வெறியர்கள்,தேச துரோகிகள் என்று நல்லவேளை யாரும் சொல்லவில்லை. அம்பானி அண்டிலியா கட்டியது போன்ற சாதனை தானே சுந்தர் அவர்கள் பெரும் பணம் தரும் பதவியை அடைவதும்.
உலகிலேயே அதிக பணியாளர்களை கொண்ட இந்திய ரயில்வே தலைமை பொறுப்பை அடைந்தவரை யாரும் தலையில் தூக்கி வைத்து கொண்டு கொண்டாடுவது கிடையாது.அதிக எண்ணிக்கை கொண்ட சீன ராணுவத்தின் தலைமை பொறுப்பையோ ,இந்திய ராணுவத்தின் தலைமை பொறுப்பை அடைந்தவரையோ பெரும் சாதனையாளர் என்று புகழ்வது கிடையாது. இங்கு மட்டும் ஏன் என்பதற்கு காரணம் இட ஒதுக்கீடு எதிர்ப்பு தானே
கல்பனா சாவ்ளாவோ ,சுனிதா வில்லியம்சோ ,விஜய் சிங்கோ கொண்டாடபடுவதில் ஒரு அர்த்தம் இருக்கிறது. ஓரளவிற்கு objective வழியில் தேர்தெடுக்கப்பட்டு குறிப்பிட்ட துறைகளில் சாதித்தவர்கள்.பிசிசிஐ தலைவர்கள் டால்மியா,சரத் பவார் ,ஸ்ரீனிவாசன் ஐ சி சி தலைவர்களாக பதவி ஏற்றதை போன்ற நிகழ்வை பெரும் சாதனையாக எண்ணி பெருமிதம் கொள்வது ஒருவர் உரிமை.அதில் யாரும் தலையிட முடியாது.ஆனால் அப்படி கொண்டாடாதவர்களின் மீது வன்மத்தை கக்குவது நியாயமான ஒன்றா
ஜெயமோகன் பாணியில் ஒரு சின்ன நிறுவனத்தில் தலைமை பொறுப்புக்கு கூட வராத வயத்தெரிச்சல் கொண்ட தோல்வி அடைந்தவர்களின் புலம்பல் என்று வரபோகும் குற்றசாட்டுக்கு முன்கூட்டியே பதில் கொடுத்து விடுகிறேன்.பல முறை முதல்வராக இருந்த தேர்தலில் தோல்வியை சந்திக்காத தலைவர்களை 100 பேர் வோட்டு போட்டு தேர்ந்தெடுக்கும் பஞ்சாயத்து கவுன்சில்லராக கூட ஆக முடியாதவர்கள்,தோல்வி அடைந்தவர்கள் தான் விமர்சிக்கிறார்கள்,அவர்களால் ஒரு சிறு பதவியை கூட அடைய முடியாது என்று வாதிடுவது சரி என்றால் நானும் தோல்வி அடைந்தவனின் பதிவு தான் இது என்பதை ஒப்பு கொள்கிறேன்.

காந்தியவாதிகளும் மரண தண்டனையும்


யாகூப் மேமனுக்கு மரண தண்டனை வழங்க கூடாது என்று போராடியவர்கள் மீது இந்த அளவிற்கு வெறுப்பையும் வன்மத்தையும் கக்குபவர்கள் தங்களை காந்தியவாதிகள் என்று சொல்லி கொள்வதை விட காந்தியை இழிவு படுத்த முடியுமா
அந்த குடும்பத்தை சேர்ந்த பலரை விட்டு விட்டார்கள் ,அதனால் இது சரியான தீர்ப்பு என்று ஒருவர் சொல்கிறார்.குண்டு வெடிப்புக்கு ,குண்டுகளை எடுத்து செல்ல பயன்படுத்தப்பட்ட கார் யார் பெயரில் இருந்ததோ ,அந்த பெண்மணிக்கு ஆயுள் தண்டனை.முதல் குற்றவாளி மாட்டவில்லை என்பதால் மாட்டியவர்கள்,அவர்களின் உறவுகளில் ஒருவருக்காவது தூக்கு கொடுக்காவிட்டால் எப்படி என்ற அடிப்படையில் கொடுக்கப்பட்ட தீர்ப்பை கடவுளின் தீர்ப்பு,தவறு இருக்க வாய்ப்பே இல்லை,அதை நிறைவேற்ற வேண்டாம் என்று போராடியவர்கள் அனைவரும் தேசத்திற்கு எதிரானவர்கள் என்று சொல்லுபவர்கள் தங்களை காந்தியவாதி என்று சொல்லி கொள்வது சரியா
தவறு செய்திருக்க மாட்டார்.. நிரபராதி என்று தண்டனை வழங்கப்பட்ட ஒருவரை பற்றி நினைப்பது தவறா. சட்டத்தால் தவறாக தண்டிக்கப்பட்டவர் என்று எண்ணுவது பெரும் குற்றமா .அவருக்காக கூடிய கூட்டத்திற்கு இது தான் முக்கிய காரணம். ஆனால் வெடிகுண்டு வைத்த வீரர் என்று எண்ணி கூடினார்கள் என்று திசை திருப்புவதை வன்மம் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது
இஸ்லாமியர் என்பதால் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு வாழ்க்கையை தொலைத்த இளைஞர்கள் எண்ணிக்கை . பல ஆயிரம் இருக்கும் மும்பையில் யாகூப் மேமொனுக்கு கூட்டம் கூடாமல் இருந்தால் தான் ஆச்சரியம். தன் உறவுகளில் பலர் சந்தேகத்தின் பெயரில் சிறையில் வாடிய நிலையை காணதவர்கள் அதற்கு எதிராக கூக்குரல் இடுவது வியப்பல்ல. சில ஆண்டுகளுக்கு முன் பெங்களூருவில் இளம் விஞ்ஞானி ஒருவர் தீவிரவாதி என்று கைது செய்யபட்டார்.அவர் மீது எந்த குற்றமும் இல்லை என்று விடுதலையும் செய்யபட்டார்.அவரும்,அவர் குடும்பமும் சந்தித்த துயரங்களை உணந்தவர்கள் யாரும் வெறி கொண்டு இஸ்லாமியர்கள் தண்டிக்கபடுவதே வெகு அரிது என்று எழுத மாட்டார்கள்.குஜராத்தில் மற்றும் பல மாநிலங்களில் பல ஆண்டுகள் சிறையில் கழித்து பின் குற்றவாளிகள் அல்ல என்று நீதிமன்றங்களினால் விடுதலையானவர்களை பற்றி எழுதினால், பக்கங்களில் அது பல வெண்முரசுகளை தாண்டி விடும்.தவறாக பல ஆண்டுகளை சிறையில் கழித்த,சந்தேகத்தின் பெயரால் துன்புறுத்தபட்ட ,உயிரை இழந்த உறவுகளை,நட்புகளை கொண்ட யாராக இருந்தாலும் யாகூப் மேமொனுக்காக வந்தவர்களின் மனநிலையை புரிந்து கொள்ள முடியும்.குறிப்பிட்ட மதத்தை சார்ந்த குற்றவாளிகள் மாட்டி கொள்வது வெகு அபூர்வம் என்று உண்மைக்கு புறம்பாக எழுத தீவிர இந்துத்வர்களே தயங்குவார்கள்,ஆனால் காந்தியவாதிகளுக்கு அந்த தயக்கம் கூட இல்லை.
சுற்றுலா சென்று விட்டு காஷ்மீர் பிரட்சினையை முழும் அறிந்தவராக அக்குவேறாக அலசி அது என்ன என்று ஆணித்தரமாக ?உண்மையை உரைத்தவர் யாகூப் மேமன் இறுதி நிகழ்விற்கு வந்தவர்களை தேசத்துரோகிகள் என்று சொல்லாமல் இருந்தால் தான் ஆச்சரியம்.பா ஜ க தான் பயன் அடைகிறது என்ற வருத்தம் ஆசானுக்கே உரித்தான மெல்லிய நகைச்சுவைக்கு எடுத்துகாட்டு
ஜெ, ஃபேஸ்புக்கில் எழுத்தாளர் பி.ஏ.கிருஷ்ணன் இப்படி எழுதியிருந்தார்.
JEYAMOHAN.IN

இந்தி திணிப்பு

  இந்தி திணிப்பு என்ற இல்லாத ஒன்றை ஊதி பெரிதாக்குகிறார்கள் உள்நோக்கம் கொண்டவர்கள் என்ற பதிவில் நவோதயா பள்ளிகளை பற்றிய என் பின்னூட்டம் தொடர்பு அற்றது என்று நீக்கபட்டது.
அதனால் இங்கே என் முகநூல் சுவற்றில்
நவோதயா பள்ளிகள் மத்திய அரசு இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் மாவட்டத்திற்கு ஒன்றாக முழுவதும் இலவசமாக நடத்தும் பள்ளிகள்.ஏழை மாணவர்கள் தங்கி படிக்கும் வசதியோடு அமைக்கப்பட்ட பள்ளிகள். மாநில அரசு நிலம் தர வேண்டும்.மத்திய அரசின் நிதி உதவியால் இலவசமாக பல்வேறு வசதிகளுடன் கல்வி தரும் பள்ளிகள் இவை .
இந்த பள்ளிகளில் இந்தி கட்டாய பாடம் என்று மத்திய அரசு முடிவு செய்தது. தமிழ்நாடு,ஜம்மு காஷ்மீர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாநிலங்கள்.முழுக்க முழுக்க தமிழ்நாட்டை சார்ந்த மாணவர்கள் படிக்கும் பள்ளியில் கட்டாய இந்தி கூடாது. விருப்ப பாடமாக இருக்கலாம் எனபது தான் தமிழ்நாடு அரசின் நிலை.இதை இன்று வரை எந்த மத்திய அரசும் ஒத்து கொள்ளவில்லை.
கட்டாய இந்தி இல்லை என்றால் பள்ளிகள் வராது என்று இன்று வரை நவோதயா பள்ளிகள் திறக்கப்படவில்லை.இந்தியாவில் குறிப்பிட்ட மாநிலத்தை சார்ந்த மாவட்டங்களில் வசிக்கும் ஏழை மாணவர்களுக்கு இலவசமாக சிறந்த வசதிகளுடன் கல்வி கிடைக்க கொண்டு வரப்பட்ட திட்டத்தை ,கட்டாய இந்தி வேண்டாம் என்றால் கிடையாது என்று மறுத்தவை தான் மத்திய அரசுகள்.
இங்கு வசிக்கும் மக்களை விட இந்தி தான் முக்கியம் என்பதை தானே இது காட்டுகிறது.இது பெரும் தவறு என்று உச்சநீதிமன்றம் மத்திய அரசின் தலையில் குட்டி இதுவரை தமிழ்நாடு நவோதயா பள்ளிகளுக்காக ஒதுக்கப்பட்ட பணத்தை வட்டியோடு தர சொல்லும் நாள் உண்மையான மக்கள் ஆட்சி,கூட்டாட்சி மலரும் நாள்.

மரண தண்டனை

பழங்காலத்தில் தண்டனை எனபது பழிக்கு பழியாக இருந்தது.இன்றும் கிராம/காப் பஞ்சாயத்துக்கள் அது போன்ற தண்டனைகளை வழங்குகின்றன/நிறைவேற்றுகின்றன.பிறகு குறிப்பிட்ட தொழில் செய்வோர்,குடும்பங்களில் பிறந்தவர்கள் போன்றோருக்கு,வயது,பாலினம் சார்ந்து எந்த குற்றமாக இருந்தாலும் மரண தண்டனை கிடையாது என்ற நிலையும் இருந்தது.
முன்னேறி வந்த முற்போக்கு எண்ணங்கள் கொண்ட சமுதாயங்கள் தண்டனைகளை குற்றவாளி திருந்த செய்யும் முறையாக பார்க்க துவங்கியது.குற்றவாளிகள் திருந்த வாய்ப்புகள் இருக்கும் போது அது தான் முயற்சிக்க படவேண்டும் எனபது தான் இன்று உலகின் பெரும்பாலான நாடுகளில் மரணதண்டனை இல்லாமல் போனதற்கு முக்கிய காரணம்.
மரண தண்டனை எதிர்ப்பிற்கு இருக்கும் இன்னொரு முக்கிய காரணம் தவறு செய்யாதவர்கள் தவறாக தண்டனை பெற இருக்கும் வாய்ப்பு. மரணம் மற்ற தண்டனைகளை பெற்ற குற்றவாளியாக தண்டனை வழங்கப்பட்டவர் நிரபராதி என்று தெரிந்தால் இழைக்கப்பட்ட அநீதிக்கு சிறிது அளவாவது பிராயச்சித்தம் செய்யலாம். ஆனால் தவறாக மரண தண்டனை வழங்கபட்டால் பின்பு அது தவறான தீர்ப்பு என்று தெரிந்தால் மாற்ற முடியுமா
உங்கள் வீட்டில் நடந்தால் என்ற கேள்வி மறுபடியும் மறுபடியும் முட்டாள்தனமாக எழுப்பபடுகிறது.வாகன விபத்தில் உயிர் இழந்தாலும்,கட்டிடம் இடிந்து விழுந்து உயிர் இழந்தாலும்,மின்சார கம்பி விழுந்து உயிர் இழந்தாலும் இழப்பு ஒன்று தான். இந்த குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு குற்றம் செய்தவருக்கு அதிகபட்ச தண்டனை வேண்டும் என்று போராட உரிமை உண்டா. தவறாக கட்டப்பட்ட,அனுமதி வழங்கப்பட்ட சினிமா தியேட்டரில் இரு குழந்தைகளையும் இழந்த தாய் குறைந்தபட்ச இரண்டு ஆண்டு தண்டனை கூட தரவில்லையே என்று அழுது கொண்டு கதறியதை சென்ற .வாரம் தானே பார்த்தோம்.விபத்துக்களின் காரணமாக உயிர் இழந்த நெருங்கிய உறவுகள் ,நட்புகள் இல்லாத குடும்பத்தை பார்ப்பது மிக மிக அரிது. அவர்களுக்கு குற்றவாளிக்கு என்ன தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்று சொல்ல இருக்காத உரிமை அதே போல உறவுகளை தீவிரவாத செயல்களில் இழந்தவர்களுக்கு மட்டும் எங்கிருந்து வருகிறது.இழப்பு இரு இடங்களிலும் ஒன்று தானே. மரண தண்டனைக்கு எதிரானவர்கள் என்னை கொலை செய்தவனாக இருந்தாலும்,என் நெருங்கிய உறவுகளை கொடூரமாக கொன்றவனாக இருந்தாலும் குற்றவாளிக்கு மரண தண்டனை கொடுக்க கூடாது என்று கார்ட் மணிபர்சில் வைத்து கொண்டால் அவர்கள் உண்மையிலேயே மரண தண்டனைக்கு எதிரானவர்கள் என்று ஒத்து கொள்வீர்களா
பெரும்பான்மையானோர் மரணதண்டனைக்கு ஆதரவானவர்கள் என்று எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள்.தமிழ்நாட்டில் மரண தண்டனை வேண்டுமா வேண்டாமா என்று வோட்டெடுப்பு நடத்தலாமா.மக்களால் வோட்டு போட்டு தேர்ந்தெடுக்கபட்ட அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் மரண தண்டனைக்கு எதிராக தீர்மானம் போட்டு மத்திய அரசுக்கு அனுப்பியது பெரும்பானமையானோர் மரண தண்டனைக்கு எதிரானவர்கள் என்பதற்கு சான்றா அல்லது மிக மிக குறைவானோர் தான் மரண தண்டனைக்கு எதிரானவர்கள் என்ற உங்கள் வாதத்திற்கு சான்றா
ஆனந்தன் அமிர்தன்
September 1
மரண தண்டனை:
தேவை இல்லை என்பவர்கள், இது வரை சப்பை கட்டு கட்டாமல் தெளிவு படுத்தாத விசயங்கள்
1, மரண தண்டனை என்பது எந்தக் குற்றம் செய்தவருக்கும் கொடுக்கக் கூடாதா? (எ.கா: அப்படிச் சொல்பவர்களின் 7-8 வயது பெண் குழந்தையை ஒரு காமுகன் பாலியல் துன்பத்திற்கு உள்ளாகி கொன்று சாக்கடையில் வீசி விடுகிறான். அவனுக்கும் கூட கூடாதா?)
2, ம.தண்டனை வேண்டாம் என்று சொல்பவர்கள் எல்லோரும் குற்றவாளிகளால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்களா? பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அனைவரும் மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்களா?
3, மரண தண்டனை வேண்டாம் என்பவர்கள் அதற்குச் சமமான மாற்று தண்டனைகளாக எதனை முன்னிறுத்துகிறார்கள்?
4, தண்டனையாகக் கொடுக்கும் மரணமே தவறென்று பேசுபவர்கள், பிறரை கொன்ற குற்றவாளிகளுக்கு எப்படி பரிந்து பேச முடிகிறது?
--------------------------------------------------------------
பெரும்பாண்மையினர் கருத்திற்கு எதிராகப் பேசினால் அறிவாளியாகக் காட்டிக் கொள்ளலாம் என்பதைத் தவிர வேறு எந்த நோக்கமும் மரண தண்டனையை எதிர்ப்பவர்களிடம் தெரியவில்லை.
மேலேயுள்ள நான்கு கேள்விகளுக்கும் நேரிடையாக பதில் சொல்பவர்கள் மட்டும் விவாதிக்கலாம். வெத்து வேட்டு உதாசீனப் படுத்தப்படும்.