Friday 23 February 2018

தீர்வு

 

வேளச்சேரி போலீஸ் என்கவுன்ட்டர் படுகொலைகள் , இஷ்ரத் ஜெகன்,கௌஸர் பி ,சோராபுதீன்,துளசிராம் பிரஜாபதி,சந்தேகத்தின் பேரில் அல்லது கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் நாடெங்கும் நடக்கும் பல ஆயிரம் கொலைகள்,மாட்டு கறி கொலைகள்,சாதி,மத ,ஒரே கோத்திர  ஆணவ படுகொலைகள் ,இந்த அட்டப்பாடி படுகொலை  என இவை அனைத்துமே ஒன்று தான்

  இதில் இந்த படுகொலையை தனித்து எடுத்து கொண்டு எல்லா வெறியர்களும் பொங்குவது விந்தையாக இருக்கிறது.தண்டனை தரும் அதிகாரம் தனி நபருக்கோ , சாதி,மத,மொழி,கட்சி குழுவுக்கோ ,காவல்துறைக்கோ,ராணுவத்துக்கோ  அறவே கிடையாது என்ற நிலை உருவானால் தான் இந்த கொடூர குற்றங்கள் குறையும்.

   திருடி இருப்பார் என்ற சந்தேகத்தில் அடித்து கொலை செய்யப்படும் நிகழ்வுகள் இல்லாத ஊரே இருக்காது.முப்பது ஆண்டுகளுக்கு முன்பு தாம்பரத்தை ஒட்டிய எங்கள் குடியிருப்புகளில்  முகமூடி கொள்ளையர்கள் வருகிறார்கள் என்று பல நகர் இளைஞர் குழுக்கள் இரவு பேட்ரோல் செல்வார்கள்.வீட்டுக்கு ஒருவர் என்று டூட்டி ரோஸ்டர் எல்லாம் உண்டு.இந்த குழுக்களிடம் சிக்கியவர்களில் மிக பெரும்பான்மையானவர்கள் மன நலம் குறைந்தவர்கள் தான்.

  அவர்களை விசாரிக்கிறேன் என்ற போர்வையில் ஒவ்வொருவரும் அடித்த அடிகளை இப்போது நினைத்தாலும் குற்றமுள்ள நெஞ்சம் குத்துகிறது.ராணுவத்தில் பணியில் இருக்கும் போது தீவிரவாதம் தழைக்கும் மாநிலங்கள் என்று இருக்கும் பகுதிகளில் இது அன்றாட நிகழ்வு.மனிதன் எவ்வளவு கொடூரமானவன் என்பதை நேரிடையாக பல ஆண்டுகள் பார்த்து,பங்கு பெற்ற அனுபவம் விரக்தி,இயலாமை,குற்ற உணர்ச்சியை தான் அதிகரிக்கிறது.

  இங்கு ஒரு அடி விழுந்தால் பதிலுக்கு எதிர் குழுவுக்கு நூறு அடி விழ வேண்டும்  என்ற மனநிலை மீண்டும் மூர்க்கமாக துளிர்த்து எழுவதும் ,தனி நபர்களும்,குழுக்களும் இதனை அதிக அளவில் செய்ய துவங்க முக்கிய காரணம்.

  சட்டம் மீதான நம்பிக்கையை முழுமையாக தகர்க்கும் பணியை தான் ஊடகங்கள் செய்கின்றன . தவறான குற்றவாளி தண்டிக்கப்பட கூடாது என்று
 சென்ற நூற்றாண்டின் இறுதியில் உலகெங்கும் மாறி வந்த சூழலை ,நாலு அப்பாவிகள் கொல்லப்பட்டாலும் பரவாயில்லை ,குற்றங்கள் குறைய கொடூர தண்டனைகளும் ,என்கவுன்டர்களும் வேண்டும் என்று எண்ணும் கூட்டமாக மாற்றுவதில் ஊடகங்கள் மிக பெரிய பங்கு வகிக்கிறது.இதன் பின்னே இருப்பது மத,மொழி,சாதி,இன,நிற வெறி தான்.

   தணடனை என்பது ,அது  எவ்வளவு கொடிய குற்றமாக இருந்தாலும் திருந்த ,மாற சந்தர்ப்பம் தரும் சிறை தண்டனையாக மட்டுமே பார்க்கும் சமூகமாக மாறினால் தான்,தண்டனை தரும் அதிகாரம் முறையான சட்ட வாய்ப்புகளுக்கு பின்னர் ,நீதிபதிகள் மட்டுமேசட்டத்தின் அடிப்படையில் தர முடியும் என்பதை முழுமையாக ஏற்று கொள்ளும் சமூகமாக மாறினால் தான்,வன்முறையை கையில் எடுத்து அடிப்பது பெரும் இழிவு,கோழைத்தனம்,,மனிதத்தன்மையற்ற செயல் என்பதை சிறுவயது முதல் ஊட்டி வளர்த்தால் தான் இந்த படுகொலைகள் இல்லாத சமூகமாக மாற முடியும்.