Saturday 27 January 2018

திராவிடர் இயக்கத்தின் தூண்

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் தான் திராவிடர் இயக்கத்தின் தூண்.துர்கா சுடாலின் அவர்கள் அல்ல.
உண்மையை,சமத்துவத்தை,பெண்ணுரிமையை ,இந்து மதம் எனும் சமூக அநீதியை புரிந்து கொள்ள வைக்கப்பட வேண்டியவர் துர்கா சுடாலின் அதற்காக குரல் எழுப்ப ,போராட வேண்டிய இயக்கம் தான் திராவிடர் இயக்கங்கள் ,திமுக
ஒரே ஒரு ஜெயலலிதா அவர்கள் மூடநமபிக்கைகளின் கூடாரமாக அதிமுகவை மாற்றியதை போல திமுகவும் மாற இவர் காரணமாகி விட கூடாது.
ஆண்டாள் பிரச்சினை அடிப்படையில் ஒரு இடஒதுக்கீடு,சம உரிமை ,சாதீய ஏற்றத்தாழ்வுகள் சார்ந்த பிரச்சினை.
தாசி குலத்தை சார்ந்தவர் என்று சொல்வதை சரி என்று வாதிடுவது ,அதற்கான சான்றுகள்,உரிமைகளை பற்றி விளக்குவது தான் திராவிட இயக்கத்தின்,அதன் கிளைகளின் கடமை.
அது தவறு என்று சொல்லும் போதே ஆணிவேரே ஆடி விடுகிறது.
இட ஒதுக்கீடு கூட தான் இதனை விட நூறு மடங்கு வருத்தத்தையும்,கோபத்தையும் போராடும் கூட்டத்துக்கு தருகிறது.
அதனால் இட ஒதுக்கீடு தவறு என்று வாதிடலாமா
இந்து மதத்தை போல பெண்களை இழிவாக,கீழானவர்களாக,திருமணம் ஆகி கணவனை இழந்த பெண்களை,திருமணம் ஆகாத பெண்களை ஒடுக்கும்,அடிப்படை தேவைகளை மறுக்கும் மதம் வேறு எதுவும் கிடையாது.
கடவுளை கூட ஆணாக்கி அவரை நினைத்து பல பெண்களும் உருகி மணாளனாக நினைத்து கொள்வதை பெருமையாக பேசுவதை இந்த நூற்றாண்டில் கொண்டாடுவதை விட அவலம் உண்டா.இதே போல பெண் கடவுள்களை மனைவியாக நினைத்து உருகி அவர்களோடு கலந்த தாசர்கள் ஏன் இல்லை என்பதை சிந்தித்தால் இந்து மதத்தின் அடிப்படை விளங்கும்.
இந்து மதத்தில் கைம்பெண்களை முதல் மனைவியாக கூட வேண்டாம் ,இரண்டாவதாக ,மூன்றாவதாக ஏன் முப்பத்தாறாயிரத்து ஒன்றாவது மனைவியாக ஏற்று கொண்ட கடவுள் உண்டா?
ஆண்டாள் கதைக்கும் நந்தனார் கதைக்கும் வித்தியாசம் கிடையாது.கிந்தனார் காலட்சேபம் தான் திராவிட இயக்கம்,கட்சிகள்.
ஆண்டாள் தாசி குலத்தவர் என்பதை பெருமையாக தூக்கி பிடிக்காமல் அப்படி சொல்லியது அபச்சாரம் என்று சொல்வதை விட திராவிடர் இயக்கத்துக்கு,கட்சிகளுக்கு முடிவுரை எழுத முடியாது.

மத நம்பிக்கை என்பதே மூட நம்பிக்கை

மத நம்பிக்கை என்பதே மூட நம்பிக்கை தான்.அதனை எதிர்க்க மாட்டோம் என்று பாஜகவும் முஸ்லீம் லீகும் தான் சொல்லும்.
இந்தியாவில் ,தமிழ்நாட்டில் பெரும்பான்மை மதம் இந்து மதம் என்பதால் ,இந்து மத எதிர்ப்பு தான் சமூக நீதி,பெண் விடுதலை,சம உரிமைக்கான,சுயமரியாதைக்கான குரலாக இருக்க முடியும்.
மதமாற்றம் இந்துக்களுக்கு கொதிப்பை ஏற்படுத்தும் விஷயம்.அதனை திமுக எப்படி பார்க்கிறது.
முன்னாள் முதல்வர் ஜெயா அவர்கள் கூட மதமாற்ற தடுப்பது சட்டம் கொண்டு வந்து பின்பு அதனை திரும்ப பெற்று கொண்டார்.இது ஞாபகத்துக்கு வந்தால் நல்லது
சுயமரியாதை திருமணம் என்பதே இந்து மத நம்பிக்கைகளுக்கு எதிரான ஒன்று தான்.அதனை சட்டபூர்வமாக ஆக்கியவர் அண்ணா
இன்றுவரை கட்சி தலைமைகள் கலந்து கொள்ளும் திருமணங்கள் சுயமரியாதை திருமணங்களாக தான் இருந்தன.இனிமேல் ஜீயர்,ஆச்சாரியார் முன்னிலையில் வேத மந்திரங்கள் ஓத தான் திருமணங்கள் நடக்குமா
தி க என்றால் சில திமுகவினருக்கு கிண்டலாக இருக்கிறது.
கலைஞர் இந்து மத எதிர்ப்பில் பெரியாருக்கு பிறகான திராவிடர் கழக தலைவர்களை விட பல மடங்கு மேலே இருந்ததால்,பலவற்றை அதிகாரத்தின் துணை கொண்டு சாதித்ததால் இளைஞர் முதல் முதியோர் வரை கழகத்தை விட திமுகவில் அதிகம் இணைந்தனர்.
கேரளாவில் கம்ம்யூனிஸ்ட் கட்சி வாங்கும் வாக்குகள் மத எதிர்ப்பு வாக்குகள்.இங்கு அவை திமுகவுக்கு சென்றன .மத எதிர்ப்பு அனாவசியம் என்று கருதும் வாக்குகள் காங்கிரஸ் பக்கம்.இங்கு அதிமுகவின் பக்கம் மத எதிர்ப்பு வாக்குகள் மிக குறைவு என்பது போல மதப்பற்றுள்ள சில திமுகவினர் நினைப்பது தான் இத்தனை குழப்பங்களுக்கும் காரணம்.
இந்து மத நம்பிக்கைகளை எதிர்க்க மாட்டோம் என்றால் அப்படி தான் அர்த்தம்
சமூக நீதி ,இட ஒதுக்கீடு,தமிழ் தான் கோவில்களிலும் ஒலிக்க வேண்டும் என்பது எல்லாம் இந்து மத நம்பிக்கைகளுக்கு எதிரான விஷயங்கள் தான்
மத மாற்றத்துக்கும்,சாதி மறுப்பு காதலுக்கும் முழு ஆதரவான இயக்கம் திமுக.அதுவும் தவறு.,திமுக அப்படி மதம் மாறும் உரிமை தவறு என்று பாஜக போல பேசும் என்றும் சொல்லி விட்டால் இந்த பேச்சுக்களுக்கே அவசியம் இல்லை.ஒதுங்க வேண்டிய நேரம் வந்து விட்டது என்று புரிந்து கொண்டு இதனை முன் நிறுத்துபவர்கள் ஒதுங்கி விடுவார்கள்.

மொழி போர்


இன்று தமிழுக்காக போராடி உயிர் நீத்தவர்களை நினைவு கூறும் நாள்.மொழிக்காக போராடி தன்னுயிரை இந்த பலரை கொண்ட சமூகங்கள் மிக குறைவு.அதில் ஒன்று தமிழ் சமூகம்.மற்றவர்கள் உயிரை எடுக்காமல் தன்னுயிரை தியாகம் செய்த போராட்டம் தமிழுக்கான 1938 ,1948 ,1965 நடந்த போராட்டம்.
மதம்,சாதி,இனம்,நாடு போன்றவற்றின் மீதான பற்று வெறித்தனம் தான் என்பதில் எனக்கு மாற்று கருத்து கிடையாது. இதில் மொழியையும் சேர்த்து கொள்வதில் எனக்கு முழு உடன்பாடு உண்டு.ஆனால் தமிழின் போராட்டம் ஆதிக்கத்துக்கான போராட்டம் அல்ல.ஆதிக்கத்துக்கு எதிரான போராட்டம்.மருத்துவ கல்லூரியில் படிப்பை முடித்த பின்பு மத்திய அரசு நிறுவனத்தில் பணியில் இருந்தேன்
அன்றைய காலகட்டத்தில் தமிழ்,ஆங்கிலம் இரண்டிலும் கையெழுத்து இடும் வழக்கம் வைத்திருந்தேன்.சில மாதங்களுக்கு பிறகு என் கையெழுத்தை தற்செயலாக ஒரு நோயாளியின் மருத்துவமனை அனுமதிக்கான சீட்டில் கண்ட உயர் அதிகாரி என்னை உடனே அழைத்தார்.என்ன பூவண்ணன் (நக்கலான அழுத்தத்தோடு ) தமிழில் கையெழுத்தா .இந்த பெரியார், திமுக வேலை எல்லாம் இங்கு உதவாது. இது மத்திய அரசு நிறுவனம் ,ஸ்டேட் government அல்ல .இங்கு இந்தியில் தான் கையெழுத்து இட வேண்டும்..சில காலத்துக்கு ஆங்கிலத்தில் அனுமதி. இன்று முதல் தமிழில் கையெழுத்திடாதே என்று அறிவுறுத்தினார்.
அவருக்கு வந்த கோவம் எனக்கு விளங்கவில்லை.அரசு அதிகாரியான அவரின் டேபிளின் கண்ணாடியின் பின் இருந்து பெரியவா,நடுவா ,சின்னவா மூவரும் என்னை நோக்கி புன்னகைத்தது ஞாபகத்துக்கு வருகிறது.இந்த நிகழ்வினால் அதற்கு பிறகு ஆங்கிலத்தில் கையெழுத்து இடுவதை அறவே விட்டு விட்டேன். இன்று வரை ஒரே கையெழுத்து .தமிழில் மட்டுமே கையெழுத்து
வடமொழி தான் உயர்ந்தது ,தெய்வ மொழி,மொழிகளின் தாய்,மொழிகளின் ஆசான் (யார் சிறந்தவர்,எது சிறந்தது என்று வெறி கொண்டு அடித்து கொள்வதில் எழுத்தாளர்களின் அருகில் கூட யாரும் வர முடியாது )என்பதற்கு எதிராக இருக்கும் ஒரே கூட்டம் தமிழ் பேசும் கூட்டம்.இந்து மதம் எனும் வர்ணாசிரம @சனாதன தர்மம் வடமொழியில் தான் நிற்கிறது.வடமொழியை எதிர்க்கும் மொழியை எப்படி இந்து மத குருக்கள் வெறுக்காமல் இருக்க முடியும்
தனி மனித உரிமை, எதிர்ப்பை தெரிவிக்க நிற்கவில்லை என்று சொன்னால் அதனை இரு கை தட்டி வரவேற்பேன்.இந்த உரிமை அனைவர்க்கும் வென்றும் என்று தான் அன்றும் இன்றும் போராட்டம்.ஆனால் அப்படி பதில் வராமல் ,யாரை பார்த்து கேட்கிறாய்?அவர் தகுதி என்ன?மரபு என்ன ?அவர் யார் தெரியுமா ? என்று வரும் பதில்கள் நாம் செல்ல வேண்டிய தூரம் வெகு தூரம் என்பதை தான் உணர்த்துகிறது.

இருபதாம் நூற்றாண்டின் ஆண்டாள்


மதுரை சண்முகவடிவு அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தெளிவாக பதிவு செய்தாலே பொய்களை கூறுவதையே தொழிலாக கொண்டுள்ள ஜீயர் முதல் எச் ராஜா வரையிலான இந்துத்வர்களின் பொய்களை எளிதில் தோலுறித்து விடலாம்.இருபதாம் நூற்றாண்டின் ஆண்டாள் எம் எஸ் என்றால் மிகை அல்ல
மிக தெளிவாக அக்கம்மாள் மகள் மதுரை ஷண்முகவடிவின் மகள் சுப்புலட்சுமி என்று பெரும்பாலோருக்கு இன்று தெரிந்தாலும் அதனை மாற்ற முயற்சிகளும் முழு வீச்சில் தூங்கி விட்டன .திடீர் என்று எஸ் என்ற ஆங்கில வார்த்தையில் ஆரம்பிக்கும் பெயர் கொண்ட ஒரு ஐயர் எம் எஸ் அவர்களின் வாழ்க்கை வரலாற்றில் வர துவங்கி விட்டார்.
சிறிது ஆண்டுகள் அழித்து மதுரை ஷண்முக வடிவின் மகள் சுப்புலட்சுமி என்று யாராவது சொன்னால் சோடா பாட்டில் வீசுவேன் என்று அருளுரை வழங்கும் ஜீயர் முதல் சூத்திரன்@வேசி மகன் என்று தினமும் யாரையாவது
திட்டும் எச் ராஜா வின் வழி தோன்றல்கள் இன்று இவர்கள் ஆண்டாள் குடும்பத்தை,அவர் சார்ந்த கூட்டத்தை,குலத்தை பற்றிய உண்மையை ஒரு பார்வையாக முன் வைக்கும் ஆய்வுக்கு குதிப்பதை போல குதிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
தேவதாசிகள் பற்றிய ஆய்வு புத்தகங்களில் தெளிவாக ஆண்டாள் பற்றிய குறிப்புகள் பல ஆண்டுகளாக உள்ளன.கடவுளுக்கு மனைவி என்று திருமணம் செய்து வைப்பதே தேவதாசி என்பவர்களுக்கு மட்டுமே உரித்தான ஒன்று.ஜீயர்,சங்கராச்சாரியாராக யார் ஆக முடியும் என்று தெளிவாக விதிகள் இருப்பது போல ,குறிப்பிட்ட பதவியை ஏற்று கொண்டால் வந்து சேரும் பட்டம் போல ,கடவுளுக்கு திருமணம் செய்து வைக்கப்படும் பெண் எந்த நூற்றாண்டிலும் தேவதாசி தான்.
எந்தெந்த சாதிகளை சார்ந்தவர்கள் தேவதாசியாக முடியும் என்றும் இந்து மதத்தில் தெளிவான விதிகள் உண்டு.இவை அனைத்தையும் ஒட்டி எழுதப்பட்ட ஆய்வு புத்தகங்கள் பல உண்டு. இந்து மத நூல்கள்,சட்டங்கள் அடிப்படையில் வழங்கப்பட்ட தீர்ப்புகளுக்கும் குறைவு கிடையாது.
எம் எஸ் அவர்களை யாரோ ஒரு பணக்கார செட்டியார் துணைவியாக வாழ அவரின் தாய் கட்டாயப்படுத்திய போது வந்த ஆபத்பாந்தவனாக சதாசிவம் ஐயர் எனும் தியாகி முன் நிறுத்தப்படும் கதையும் பல ஆண்டுகளாக ஓடுகிறது.தன் தாயிடம் கோவித்து கொண்டு சென்னைக்கு வந்த எம் எஸ் முதலில் உதவிக்கு அணுகிய கலை ஆர்வலர் குடுமபத்தின் எதிர்ப்பின் காரணமாக சதாசிவத்தின் உதவியை நாடினார்.
தியாகி சதாசிவ ஐயர் மனைவி பிரசவத்துக்கு அவர் தாய் வீட்டுக்கு சென்றதால் அவர் வீட்டிலேயே எம் எஸ் தங்கி கொள்ள அனுமதித்த மாபெரும் புரட்சியாளர் சதாசிவ ஐயர்.தங்கையை சமாதானம் செய்து அழைத்து போக வந்த எம் எஸ் சக்திவேல் அவர்களை அடித்து விரட்டி இன்றைய ஜீயருக்கு முன்னுதாரணமாக விளங்கியவர்.அவர் மனைவி சில மாதங்களுக்குள் இறந்து விட்டதால் தியாகத்தின் உச்சமாக எம் எஸ் அவர்களை மனைவியாக ஆக்கி கொண்டவர்.
தியாகத்துக்கு விலையாக அவரின் குடும்ப உறவுகளை முழுவதுமாக கத்தரித்து விட்டு என்ன பாட வேண்டும்,எங்கு பாட வேணும்,எப்படி பாட வேணும் என்று அனைத்து முடிவுகளையும் எடுத்தவர்.இன்று ஆண்டாளை முழுவதுமாக இதே போல சொந்தம் கொண்டாடும் கூட்டத்தின் முன்னோடி ஆயிற்றே.
மதுரை ஷண்முக வடிவு சுப்புலட்சுமி ஒரு முறை காஞ்சி சங்கராச்சாரியார் கலந்து கொள்ளும் ஒரு நிகழ்வில் மடிசார் கட்டி இருப்பதை பார்த்து அடைந்த கோவத்தை பற்றி வாலி, எம் எஸ் சொன்னதை பதிந்திருப்பார்.அவரோடு ஒப்பிடும் ஜெயேந்திரரும்,விஜேயேந்திரரும் பல மடங்கு மேல் தான்.
அவர் வாழ்நாள் முழுவதும் வலியுறுத்தி வந்த பால்ய திருமணம்,பெண் சொத்துரிமைக்கு எதிர்ப்பு,கைம்பெண் மறுமணம் பெரும்பாவம் ,தீண்டாமையின் மகத்துவம் போன்றவற்றை இன்று வெளிப்படையாக யாரவது வலியுறுத்த முடியுமா ?இவர் காலத்தில் மடம் அடைந்த உச்சம் ,இவரின் அபரிதமான ஞானம்,முக்காலமும் கடந்த ஞானி என்று பல முற்போக்காளர்களும் நெகிழும் போது குழப்பமாக இருக்கிறது.
கைம்பெண் மறுமணம் தவறு என்று எண்ணம் கொண்ட ஒருவர் தமிழ்த்தாய் வாழ்த்தை மதித்து எழுந்து நின்றிருந்தால் தான் வருந்த வேண்டும்.
ஆண்டாள் கடவுளை திருமணம் செய்து கொண்டவர்.சுமங்கலியாக இறந்தவர்.இப்படி வாழ்ந்தவர்களுக்கு என்ன பெயர் என்று இந்து மதத்தை கரைத்து குடித்தவர்கள் பதில் சொல்லுங்களேன்