Thursday 8 March 2018

இஷ்ரத் ஜகான்,கௌஸர் பி,வேளச்சேரி என்கவுன்ட்டர் கொலைகள்,உஷா படுகொலை



  திருச்சியில் காவல்துறையினர் அராஜகத்தினால் கொல்லப்பட்ட மூன்று மாத கர்ப்பிணியான உஷாவின் மரணம் பலரை உலுக்கி ருக்கிறது.ஆனால் கேரளாவில் திருடன் என்று சந்தேகத்தில் அடிக்கப்பட்டு அதன் காரணமாக உயிர் இழந்த மதுவின் படுகொலையின் போது பொங்கிய அதே என்கவுன்ட்டர் ஆதரவு கூட்டம் இங்கும் பொங்குவது கோவத்தை தான் தருகிறது.

  பதிலுக்கு பைக்கை எட்டி உதைத்த காவலர் துடிக்க துடிக்க கொல்லப்பட வேண்டும் என்ற குரலும் ஓங்கி ஒலிக்கிறது.இந்த மனநிலை தான் உஷாவின் உயிர் இழப்புக்கு காரணம் என்பதை புரிந்து கொள்ளாத மூடர் கூடமாக இன்னும் பலர் இருப்பது வேதனை தான்.சந்தேகப்படும் குற்றவாளியான கணவனோடு சேர்ந்து கொல்லப்பட்ட கௌஸர் பி படுகொலையை சரி என்று ஆரவாரித்து கைதட்டி கூட்டத்துக்கு இங்கு கோவப்பட ஏதாவது நியாயம் இருக்கிறதா ?

  கல்லூரி மாணவி இஷ்ரத் ஜஹானை ,இது போல திடீர் வெறித்தனம் காரணமாக எட்டி உதைத்து உஷாவின் படுகொலை நடந்ததை போல அல்லாது ,திட்டமிட்டு படுகொலை செய்து தீவிரவாதி போல செட்டப் செய்த காவல்துறையினரும் அதன் காரணகர்த்தாக்களும் உயர்பதவியில் இருப்பதை வெறி கொண்டு ஆதரிக்கும் கூட்டம் இருக்கும் வரை இந்த படுகொலைகள் தொடர்கதையாக தொடர தான் செய்யும்.

  அரச பயங்கரவாதம்  தனி நபர் மற்றும் அரசுக்கு எதிரான பயங்கரவாதத்தை விட பல மடங்கு கொடியது.அரச பயங்கரவாதத்தை ஆதரிக்கும் யாரும் மது கொலை மற்றும் உஷாவின் படுகொலை கண்டு கௌஸர் பி ,இஷ்ரத் ஜகான் படுகொலைகளின் போது தெரிவித்த ஆதரவை தெரிவித்தால் அவர்களின் வெறித்தனத்துக்கு நேர்மையாகவாவது இருப்பதாக அர்த்தம்.

   நான் யார் தெரியுமா என்பது தான் உடுப்பு தரும் முதல் குணம். நான் சொல்வதை நீ கேள் என்பது அடுத்தது.இவற்றை மாற்றாதவரை காவல்துறையோ ,ராணுவமோ கொலைகளை செய்ய தயங்காது.இதிலாவது கொல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் எட்டி உதைத்த காவலர் ஈடுபட்டிருக்க மாட்டார். ஆனால் என்கவுன்ட்டர் கொலைகளில் ஈடுபட்ட காவலர்கள் அனைத்தும் தெரிந்தே ,அப்பாவிகளையோ ,சந்தேகத்துக்குரிய குற்றவாளிகளையோ குற்ற உணர்ச்சியே இல்லாமல் கொல்பவர்கள்.

      அவற்றை தடுக்க மக்கள் ஆட்சியின் அனைத்து தூண்களும் ,மக்களோடு இணைந்து முழுமூச்சோடு  செயல்பட்டால் தான் இதற்கு ஒரு முடிவு வரும்..

No comments:

Post a Comment