Saturday 14 April 2018

இஷ்ரத் ஜஹான் -கௌஸர் பி -ஆஷிபா


ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் கடத்தி,அடைத்து வைக்கப்பட்டு ,மயக்கம் கொடுத்து காவல்துறையினர் உட்பட பலரால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட ஆசிபா சிறுமியாக அதுவும் குழந்தையாக இருந்ததால் தீவிரவாதியாக மாற்றப்படவில்லை.இதற்கு முன் இதே போல கொடூரமாக கொலை செய்யப்பட்ட இஷ்ரத் ஜஹான் ,கௌஸர் பி மற்றும் ஆசிபா கொலைகளுக்கு இடையே எந்த வித்தியாசமும் கிடையாது.
ஆனால் அந்த கொலைகளின் காரணகர்த்தாக்கள் இதனை மெடல் போல அணிந்து தேர்தல்களில் மகத்தான வெற்றி அடைந்து நாட்டை ஆளும் இடத்தில அமர்ந்து இருப்பதை தெளிவாக மறைத்து விட்டு கடும் தண்டனை கொடுத்தால் ,குற்றவாளிகளை என்கவுன்ட்டர் செய்தால்,இவற்றை குற்றமாக பார்க்காத மாநில அமைச்சர்கள் பதவி விலகினால் சரியான தண்டனை கிடைத்ததை போன்ற பிம்பத்தை உருவாக்க பல நடுநிலையாளர்கள் வழக்கம் போல முழுமுயற்சி எடுக்கிறார்கள்.
கணவனோடு பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த பெண்ணை , ஒரு சிறு வழக்கில் கூட சந்தேகப்படும் குற்றவாளியாக இல்லாத கல்லூரி மாணவியை ஆசிபா போல கொடூரமாக கொன்ற கூட்டத்தின் ஆட்சியில் இதை போன்ற கொடூரங்கள் நடைபெறுவது ஆச்சரியமா என்ன ?
கௌஸர் பி வழக்கை விசாரித்து வந்த நீதிபதிக்கு ஏற்பட்ட முடிவு உணர்த்தும் செய்தி என்ன ?ஒட்டுமொத்தமாக ஒரு பெருங்கூட்டத்தை இது போன்ற கொடூர குற்றங்களை புரிவதை மதத்துக்காக,தேசத்துக்காக செய்யும் அரும்பெரும் செயல் போல உருவாக்கி வைத்திருக்கும் சங்க பரிவாரங்கள் சக்தி பயம் தருகிறது.
இதனை அந்த மதத்துக்காரர்கள் செய்யவில்லையா?இந்த மாநிலத்தில் நடக்கவில்லையா?அந்த நாட்டில் நடக்கவில்லையா என்று எளிதாக மடைமாற்றும் ஆற்றல் வேதனையை தருகிறது.பழங்குடி இனத்தை சார்ந்த ஒருவர் தங்கள் சாதி,மதத்தை சார்ந்த மக்கள் வசிக்கும் இடத்தில நிலம் வாங்கியதை மூர்க்கமாக எதிர்த்தவர் தான் முக்கிய குற்றவாளி என்பதை படித்தால் இந்த கொடூர செயலுக்கான உளவியல் காரணம் விளங்கும்.
பிரிவினை கொடூரங்களோ,காதலுக்கு எதிரான ஒரே கோத்திர ,சாதி ஆணவ கொலைகளோ ,மாட்டுக்கறியா சாப்பிடுகிறாய் என்று கொலை செய்யும் நிகழ்வுகளோ ,இதற்கு பின்னே இருப்பது மாற்று கருத்து,உணவு,மதம்,கடவுள் ,மொழி மீதான வெறுப்புணர்வு தான்.இது தரும் ஜஸ்டிபிகேஷன் தான் எந்தவித குற்ற உணர்ச்சிகளும் இல்லாமல் கொலைகளை,பாலியல் வன்முறைகளை புரிய வைக்கிறது.

No comments:

Post a Comment