Thursday 2 August 2018

என் வங்கி கணக்கில் ஒரு கோடி போட்டவரய்யா கலைஞர்



ரூபாய்க்கு மூன்று படி என்று சொல்லி ஆட்சியை பிடித்தார்கள்.ஆனால் கொடுத்தார்களா என்ற கிண்டலுக்கு பதிலாக இலவசமாக மாதாமாதம் குடும்பத்துக்கு பத்து படி கிடைக்கும் மாநிலமாக தமிழ்நாட்டை ஆக்கியவர்.தமிழ்நாட்டை விட பல மடங்கு வருவாய் உள்ள மத்திய அரசு மற்றும் பிற மாநிலங்கள் யோசிக்க கூட தயங்கும் நிலையில் இதனை எளிதாக நிறைவேற்றியவர் கலைஞர்.
திமுகவை அவரின் கடைசி தேர்தலில் தோற்கடித்தது தமிழகம் அல்ல.கொங்கு பகுதி தான். அங்கு குறிப்பிடத்தக்க சதவீதம் உள்ள கொங்கு வெள்ளாளரை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து கல்வி,வேலைவாய்ப்புகளில் குறிப்பிடத்தக்க இடங்களை பிடிக்க காரணமாக இருந்தவர் கலைஞர். அங்கு குறிப்பிடத்தக்க சதவீதம் உள்ள இன்னொரு சமூகம் அருந்ததியர் சமூகம்.நாடெங்கும் பட்டியல் இனத்தின் உள்ளே முயற்சிக்கப்பட்ட உள் ஒதுக்கீடு நிறைவேற இன்றுவரை ஆயிரம் தடைகள் இருக்க ,அருந்ததியர் உள் ஒதுக்கீட்டை எளிமையாக உறுதியோடு நிறைவேற்றி இன்றுவரை வெற்றிகரமாக தொடர காரணம் கலைஞர் .
மத அடிப்படையில் இட ஒதுக்கீடா,இட ஒதுக்கீடு தவறு .அப்படி கொடுத்தாலும் இட ஒதுக்கீடு இந்துக்களுக்கு மட்டுமே என்று கொதிக்கும் இந்துமதவெறி கூட்டம் இன்றும் அதிகமாக இருக்கும் சூழலில் கூட இஸ்லாமியருக்கு இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு செய்து அது வெற்றிகரமாக தொடர காரணம் கலைஞர்.
கலைஞரை அதிகம் திட்டிய சாதி தலைவர்களில் வன்னியர்களுக்கு எளிதாக முதலிடம் கிடைக்கும் .வன்னியர்களை,மீனவர்களையும் ,சீர்மரபினரையும் தனி பிரிவாக்கி இருவது சதவீத மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு சட்டம் இயற்றி நிறைவேற்றியவர் கலைஞர் .
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் என்பது முட்டாள்தனம் என்று இன்றுவரை சொல்லும் கூட்டமே நாடெங்கும் அதிகமாக இருக்க ,இதனை முப்பது ஆண்டுகளுக்கு சாத்தியமாக்கியவர் கலைஞர்
மூன்று மாவட்டத்துக்கு ஒரு மருத்துவ கல்லூரி என்பதை பெரும் மாற்றமாக முன்வைக்கும் மதவெறி கூட்ட தலைவனின் வெட்டி பேச்சுக்களுக்கு இருவது ஆண்டுகளுக்கு முன்பே மாவட்டத்துக்கு ஒரு அரசு மருத்துவ கல்லூரி என்று திட்டமிட்டு அதற்கு அடித்தளமிட்டவர் கலைஞர். இன்றும் அரசு மருத்துவ கல்லூரி இடங்கள் அதிகம் இருக்கும் மாநிலம் தமிழ்நாடு தான்.
பட்டதாரி இல்லா குடும்பங்களை சார்ந்த மாணவ மாணவிகளுக்கு இதன் அடிப்படையில் முற்பட்டோர் உட்பட ஐந்து ஊக்க மதிப்பெண்கள் தந்த அரசு கலைஞரின் அரசு. அதனை சாதிவெறி நீதிமன்றங்கள் அடிக்க அதன் அடிப்படையில் இன்றுவரை கட்டண சலுகை ,ஸ்காலர்ஷிப் தரும் மாநிலம் தமிழ்நாடு
கிராமப்புற மாணவர்களுக்காக கிராமப்புற இட ஒதுக்கீடு கொண்டு வந்த அரசு கலைஞரின் அரசு தான் .இதனால் பலனடைந்து மாணவர்களை கண்டு வெறுப்புக்கொண்ட நீதிமன்றங்கள் இத்தனையும் நிராகரிக்க மனம் தளராத விக்ரமன் போல நுழைவு தேர்வு பெண்களுக்கு,கிராமப்புற மாணவ மாணவிகளுக்கு தடையாக இருப்பதால் அதனை நீக்கியவர் கலைஞர் தான்
அற்புத நுழைவு தேர்வுகளின் காரணமாக IITJEE போன்ற தேர்வுகளில் மாணவிகள் வெறும் எட்டு சதவீத இடங்களை பிடிக்கிறார்கள் என்று முதலை கண்ணீர் வடித்து அவர்களுக்கு கூடுதல் இடங்களாக 14 சதவீதம் என்று கல்வியில் ஒதுக்க முயற்சிப்பதை முப்பது ஆண்டுகளுக்கு முன் பணிகளில் சாதித்த அரசு கலைஞரின் அரசு.அரசு பணிகளில் பெண்களுக்கு முப்பது சதவீதம் என்று முப்பது ஆண்டுகளுக்கு முன் உத்தரவிட்ட அரசு கலைஞரின் அரசு
பள்ளிகளில் பாலியல் குற்றங்கள் குறைய ஐந்தாம் வகுப்பு வரை ஆசிரியைகள் மட்டும் தான் என்று உத்தரவிட்டு நிறைவேற்றிய அரசு கலைஞரின் அரசு. இன்றும் மத்திய அரசு பள்ளிகளிலோ ,மற்ற மாநிலங்களிலோ இந்த நிலை கிடையாது.தமிழ்நாட்டில் உள்ள ஆசிரியர்களில் நான்கில் மூன்று பங்கு பெண்களுக்கு தான் எனும் சூழலுக்கு வலுவான அடித்தளமிட்டவர் கலைஞர் .
இன்றும் மத்திய அரசு பள்ளிகளில் ,பல ஆயிரம் கோடிகளை வடமொழிக்கும்,இந்திக்கும் ஒதுக்கும் அரசு பள்ளிகளில் படிக்க ஆண்டுக்கு சில ஆயிரம் கட்டணம் உண்டு.ஆனால் அரசு பள்ளிகளில்,நகராட்சி பள்ளிகளில்,அரசு உதவி பெரும் பள்ளிகளில் பள்ளி படிப்பு,புத்தகம்,சீருடை,உணவு,முட்டை ,சைக்கிள் முதல் லேப்டாப் வரை இலவசமாக கிடைக்கும் ஒரே மாநிலம் தமிழ்நாடு தான் .இதில் பெரும்பான்மை நலத்திட்டங்களுக்கு முக்கிய காரணம் கலைஞர்
தாய் தந்தை இருவரில் யார் சாதியை வேண்டுமானாலும் சாதிமறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களின் வாரிசுகள் எடுத்து கொள்ளலாம் என 44 ஆண்டுகளுக்கு முன் சட்டம் போட்டவர் கலைஞர்.அதனை மூர்க்கமாக இன்றுவரை மறுப்பவை சாதிவெறி நீதிமன்றங்கள் .சாதிமறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களின் வாரிசுகளுக்கு மருத்துவ கல்லூரிகளில் இட ஒதுக்கீடு கொடுத்த அரசு கலைஞரின் அரசு .வழக்கம் போல அதனை வெறி கொண்டு அழித்த கூட்டத்தை சொன்னால் தான் தெரியுமா ?
மாணவ மாணவிகள் பள்ளிகளுக்கு செல்ல பேருந்தில் இலவச பாஸ் கொடுத்த அரசு கலைஞரின் அரசு
எல்லாரும் பாஸாகி பள்ளி படிப்பை முடித்தால் ,எளிதாக மருத்துவம்,பொறியியல் ,சட்டம் ,காலை கல்லூரிகளில் சேர்ந்து கல்லூரிகளில் சேர்ந்து பட்டதாரி ஆனால் கல்விக்கு என்ன மதிப்பு என்று சிந்திக்கும் படிப்பை கடினமாக வைத்திருந்த சைக்கோ கூட்டத்தின் பிடியில் இருந்து கல்வியை மீட்டு இந்தியாவில் பள்ளிகளில் தேர்ச்சி பெரும் மாணவ மாணவிகள்,கல்லூரிகளில் சேரும் மாணவ மாணவர்கள் GER சதவீதத்தில் முதலிடம் பெற முக்கிய காரணமய்யா கலைஞர்
மத்திய அரசு பல ஆயிரம் கோடி ஒதுக்கும் அய்ய்ம்ஸ் மருத்துவமனையில் இன்றும் பெரும்பான்மை நோயாளிகளுக்கு அனைத்து சேவைகளுக்கும் கட்டணம் உண்டு.இலவசமாக பெரும்பான்மை மக்கள் தமிழ்நாடெங்கும் மருத்துவம் பார்த்து கொள்ளும் வலுவான கட்டமைப்பை உருவாக்கியதில் கலைஞரின் பங்கு அளப்பரியது
பென்ஷனோடு பொங்கல் பரிசு வாங்கும் ஆசிரியையின் மகனாக ,இட ஒதுக்கீடு ,ஊக்க மதிப்பெண் மூலம் மருத்துவ படிப்பு படித்த மருத்துவனாக,இஸ்லாமிய ,கிருத்துவ உறவுகளோடு ,பல ஆயிரம் நட்பு ,சுற்றம் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக அறுவை சிகிச்சை செய்து கொண்ட இலவசமாக பள்ளி படிப்பு படித்து ,ஸ்காலர்ஷிப் மூலம் கல்லூரி படிப்பு முடித்து, 69 சதவீத இட ஒதுக்கீடு ,அதிகரித்த அரசு ,தனியார் வேலைகள் , பெண்களுக்கான ,இட ஒதுக்கீடு,உள் ஒதுக்கீட்டு கோட்டா மூலம் பணி கிடைத்த தமிழ்நாட்டு குடிமகனாக கணக்கிட்டால் என் வங்கி கணக்கில் கலைஞர் போட்டது
எளிதாக கோடியை தாண்டும்

No comments:

Post a Comment