Sunday 10 December 2017

சென்னை வெள்ளமும் சகிப்புத்தன்மையும்,சகிப்புத்தன்மை இன்மையும்


சென்னை, கடலூர் மற்றும் கடலோர மாவட்டங்கள் பேரழிவுகளை சந்தித்துள்ள நிலையில்,பல ஆயிரம் மக்கள் அந்த துயரை துடைக்க போராடி கொண்டிருக்கும் வேலையில் சகிப்புத்தன்மை இன்மை பற்றி எழுத தயக்கமாக இருந்தாலும் தமிழக,மற்ற மாநில மற்றும் என் ஆர் ஐ ஹிந்துத்வா குழுக்கள் சென்னை வெள்ளத்தை வைத்து தங்கள் வெருப்பரசியலையும்,சகிப்புதன்மையற்ற நிலைக்கு எதிரான போராட்டங்களையும் கிண்டல் செய்து சமூக வலைதளங்களில்,இணைய பத்திரிக்கைகளில்,திறந்த மடல்களாக அடித்து ஆட துவங்கியுள்ளதால் மறுப்பு எழுத வேண்டிய நிலை.
ஹிந்து மதமே சென்னை மக்கள் மற்றவர்களுக்கு மற்றும் ஒருவருக்கு ஒருவர் உதவி கொள்ள காரணம் என்று ஒரு கூட்டம் கிளம்பி உள்ளது.எங்கள் மதத்தை சேர்ந்தவர்கள்,சங்க பரிவாரங்கள் தான் அதிக அளவில் உதவிகளை செய்தவர்கள் என்ற பிரசாரங்கள்,உதவி செய்யும் மாற்று மதத்தை சார்ந்த குழுக்களின் மீது வெறுப்பும்,வன்மமும் கொண்ட பதிவுகள்.சந்தில் சிந்து பாடும் முறையில் சகிப்புத்தன்மை குறைந்தது என்று சொன்னவர்களை செய்யும் நக்கல் என ஹிந்துத்வ குழுக்கள் முழுமூச்சில் சமூக வலைதளங்களில் இறக்கி விடப்பட்டுள்ளன
முதலில் சில உண்மைகள்.தமிழ்நாடு ,முக்கியமாக சென்னையும் சுற்றுப்புறமும் ஹிந்டுத்வதையும் அதன் பல்வேறு இயக்கங்களையும்,கட்சிகளையும் பொருட்டாக எண்ணாத இடம்.இங்கு அதனால் தான் இஸ்லாமியர்களும் ,கிருத்துவர்களும் எளிதில் இறங்கி பலருக்கு உதவ முடிந்தது.20 ஆண்டுகளாக தொடர்ந்து பா ஜ க ஆட்சியில் இருக்கும் குஜராத்தில் இஸ்லாமியர் சென்று ஹிந்து தெருக்களில் உதவும் நிலை உள்ளதா,அவர்கள் தரும் பொருட்களை மாற்றுமதத்தவர்கள் ஏற்று கொள்வார்களா என்பதை சற்று எண்ணி பார்த்து விட்டு ஹிந்துத்வா இயக்கங்கள் பீற்றி கொண்டால் நலம்.
ஆமீர் கான் மனைவி ஹிந்துவாக பிறந்தவர்.இஸ்லாமியரை காதல் மணம் புரிந்து கொண்டவர்.இந்துவாகவோ ,இஸ்லாமியராகவோ,கடவுள் மறுப்பாளராகவோ,மாட்டு கறி உண்பவராகவோ அல்லது சைவ உணவு உண்பவராகவோ வாழ்பவர். அவரை போன்றவர்களின் உரிமைகளை ஆதரிக்கும் கட்சிகள் ,மக்கள் பலரை கொண்ட இடம் தமிழ்நாடு.அவரின் திருமணம் ,உணவு.கடவுள் நம்பிக்கை,பிறப்பால் திணிக்கப்பட்ட மதத்தை தூக்கி எரிந்து விட்டு தனக்கு வேண்டிய கடவுளை,மதத்தை தேர்ந்தெடுத்து கொள்ளும் உரிமை அதிகம் இருக்கும் மாநிலம் இது. இவை அனைத்துக்கும் எதிரான இயக்கங்கள் அதிகாரத்திற்கு வரும் போது அச்சபடுவதில் தவறு என்ன.அவர் அச்சம் தவறு என்று சங்க பரிவாரங்கள் காட்ட வேண்டுமானால் கீழே சுட்டி காட்டப்படும் மூன்றையும் முழுமனதோடு ஆதரிக்கிறேன் என்று அறிக்கை விடுங்களேன்
உலகின் பெரும்பான்மையான மக்களின் உணவான மாட்டு கறி உண்ண யாருக்கும் தடை கிடையாது. தனி மனிதரின் விருப்பு வெறுப்புகளில் அரசு தலையிடாது
சாதி மதம் கடந்து யாரை வேண்டுமானாலும் காதலித்து திருமணம் செய்து கொள்ள மேஜர் ஆன ஆண்,பெண்களுக்கு உரிமை உண்டு.லவ் ஜெஹாத் எதிர்ப்பு என்று பெண்களை இழிவாக நினைக்கும் ,சுய முடிவு எடுக்கும் திறன் அற்றவர்கள் என்று எண்ணும் போராட்டங்களுக்கும் எங்களுக்கும் தொடர்பு கிடையாது.சாதி,மதம் கடந்த காதல் திருமணங்களை முழுமனதோடு ஆதரிக்கிறேன்.
பிறப்பால் திணிக்கப்பட்ட மதம்,சாதி,சாதி சார்ந்த தொழில்,பெண்ணடிமைத்தன சடங்குகளை உதறி தள்ளி விட்டு தனக்கு பிடித்த கடவுள்,படிப்பு,வேலை,வாழ்விடம் ,வாழ்க்கை துணையை தேர்ந்தெடுத்து கொள்ள ஒவ்வொரு தனி மனிதருக்கும் உரிமை உண்டு .
மேற்கூறிய மூன்றுக்கும் ஆதரவான நிலை எடுத்த கட்சிகள் தான் தமிழ்நாட்டில் மிக பெரும்பான்மையான மக்களின் ஆதரவை பெற்ற கட்சிகள்.இந்து கடைகளிலேயே பொருட்களை வாங்குங்கள்,மாற்று மதத்தவர் நடத்தும் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்காதீர்கள்,மாற்று மதத்தவரோடு ஹிந்து பிள்ளைகள் பழகுவதை தவிருங்கள்,தீவிரமாக கண்காணியுங்கள் என்று பேசும் ராம கோபாலன் ,அர்ஜுன் சம்பத்,எச் ராஜா,மணியம் போன்றோரை தலைவர்களாக கொண்ட இயக்கங்கள் சென்னைக்கு ,இங்கு உதவும் மக்களை எடுத்துகாட்டாக மற்றவருக்கு சொல்வதை விட சிறந்த நகைச்சுவை உண்டா.சங்க பரிவாரங்கள் வலியுறுத்தும் அனைத்துக்குமே நேரெதிர் நிலை கொண்டவர்கள் அதிகம் இருப்பதால் தான் மக்கள் சாதி,மடம் கடந்து உதவும் நிலை இருக்கிறது என்பதை பரிவாரங்கள் புரிந்து கொண்டு தங்களை மாற்றி கொண்டால் மகிழ்ச்சி தான்

No comments:

Post a Comment