Sunday 10 December 2017

மீட்பு பணி


விவசாயம் எவ்வளவு முக்கியமான கடினமான தொழில்.மீன் பிடிப்பது எவ்வளவு சுலபமான அதிக வருவாய் தரும் தொழில் .கிருத்துவர்கள் அதிகம் இருப்பதால் கூச்சல் அதிகமாக இருக்கிறது என்ற ஒரு பதிவு கண்ணில் பட்டது. இந்துத்வர்கள் பலர் இது போன்ற,இதை விட மோசமான பதிவுகளை எழுதி கொட்ட துவங்கியுள்ளதன் காரணம் விளங்கவில்லை.
அங்கு குஜராத்தில் ஹிந்து சாம்ராட் மோடி தேர்தல் பிரச்சாரத்தில் பாகிஸ்தான் அஹ்மத் படேல் முதல்வராக விரும்புவது ஏன் என்று புரிகிறதா என்று கேள்வி கேட்கும் போது அவரின் தொண்டர்கள் இப்படி பேசாமல் இருந்தால் தானே ஆச்சரியம் என்ற உண்மை உறைத்தாலும் இந்த சூழலில் இப்படி பேச முடியுமா என்று வேதனையாக இருக்கிறது.
கன்யாகுமரி வாழ் மீனவர்கள் ஒக்கி புயலில் அடைந்த பெரும் பாதிப்புக்கு மத்திய மாநில அரசுகள் புயலுக்கு முந்தைய ,எச்சரிக்கை ,துரிதப்படுத்தி இருக்க வேண்டிய மீட்புப்பணிகளில் ஆர்வம் காட்டாததால் ,பாதிக்கப்பட்ட மக்களின் துயர் தீர்க்க முக்கியத்துவம் தராததால் எழுந்துள்ள மீனவ மக்களின் கோவம் மிக நியாயமானது.
கடலும் மலையும் எந்த மீட்பு பணிக்கும் சவால் விடும் இடங்கள்.பனிமலைகளில் பனிச்சரிவு காரணமாக பல நூறு வீடுகள் பல கிலோமீட்டர் சாலைகள் அடித்து செல்லப்படும்.ராணுவத்தில் எதிரி ராணுவத்தின் குண்டுகள்,போரில் உயிர் இழந்தவர்களை விட பனி சரிவுகளில் ,பனி புயல்களில் சிக்கி உயிர் இழந்தவர்கள் எண்ணிக்கை அதிகம்.இது அப்படியே கடல்வாழ் மீனவர்களுக்கும் பொருந்தும்.
மிகவும் சவாலான வாழ்க்கை அது.இங்கு மீட்பு பனி மிக கடினமான ஒன்று.சென்னை வெள்ளத்தின் போது உதவிய வகையில் இங்கு உதவ வேண்டிய சூழல் இல்லை என்பதை தான் அங்கு வசிக்கும் மக்கள் சுட்டி காட்டுகின்றனர்.அவர்களுக்கு வேண்டியது துரிதமான தீவிரமான மீட்பு பணி.இதனை மத்திய அரசு மட்டுமே செய்ய முடியும்.மத்திய அரசின் கையாலாகாத்தனத்தை மறைக்க கோவம் அனைவரின் மீதும் திருப்படுகின்றதோ என்று தெரியவில்லை.
உலகமே சேர்ந்து தேடியும் காணாமல் போன் விமானம் இன்றும் கிடைக்கவில்லை.அதில் பயணித்த பல நூறு பயணிகள் நிலை இன்றும் புரியாத புதிர் தான்.பரந்து விரிந்திருக்கும் கடலில் எங்கோ வீழ்ந்திருக்கும் வாய்ப்புகள் தான் மிக அதிகம்.கடல் பயமுறுத்தும் அளவுக்கு வேறு எதுவும் பயமுறுத்தாது .கடல் வாழ் வாழ்க்கை வீரம் மிகுந்த வாழ்க்கை.
இதற்கு நடுவே தமிழ்நாட்டை பல ஆண்டுகள் பின்னோக்கி அழைத்து செல்லக்கூடிய நிகழ்வான சல்லிக்கட்டு போராட்டம் வேறு அடிக்கடி எடுத்துக்காட்டாக முன் நிறுத்தப்படுகிறது .முட்டாள்தனம்,மூர்க்கத்தனம்,மூடத்தனம் நிரம்பிய ஒரு சடங்கு சல்லிக்கட்டு.அதற்கு நடந்த ?போராட்டத்தால் பல டஜன் உயிரிழப்புகள் தான் ஒரே பலன்.சல்லிக்கட்டுக்கும் சென்னைக்கும் என்ன தொடர்பு .தமிழன் மிக முட்டாளான,தான் இத்தனை நாள் போராடி வந்த,பெற்ற அனைத்து உரிமைகளுக்கும் எதிரான போராட்டம் சல்லிக்கட்டு போராட்டம் என்பதை உணராத போராட்டம்.
அதற்கு கூடிய கூட்டம் ஒரு ஜாலி கூட்டம்.,மத்திய அரசு,மாநில அரசு அனைத்தும் சாமரம் வீசி வேடிக்கை பார்த்த கூட்டம்.போராட்டம் சற்றே வேறு பிரச்சினைகளை பேச துவங்கும் சூழல் உருவாகுமோ என்ற அச்சம் வந்தவுடனே அரசு தன் கோரமுகத்தை காட்டிய போராட்டம்.இந்த ஆண்டோடு ஒரு துன்பியல் சம்பவமாக இதனை நினைத்து அதனை மேற்கோள் காட்டுவதை கைவிட்டாலே நன்மை தான்.
பெரும்பான்மை மக்களுக்கு மீட்பு பணி,நிவாரண பணி ,உதவி என்பதன் வித்தியாசம் தெரியாத நிலை தான் மிகவும் வருத்தம் தருகிறது.இங்கே மீட்பு பணி என்பது இப்போதும் உயிருக்கு போராடி கொண்டிருக்கும் வாய்ப்புகள் உள்ள மீனவர்களை காப்பாற்றும் ,காப்பாற்ற கூடிய ஒன்று என்பதை விளங்கி கொள்ள கூடிய சூழல்,அறிவு பெரும்பாலானோருக்கு இல்லை என்பது சுடும் உண்மை.
அரசின் வேலை,மீட்பு,நிவாரணம்,உதவி செய்பவர்களின் வேலை பெட் சீட்,உணவு பொட்டலம் தருவது மற்றும் அரசு வீட்டுக்கு தரும் நிவாரண தொகை மட்டுமே என்று நினைத்து கொண்டிருப்பவர்களை வைத்து கொண்டு சல்லிக்கட்டு வேண்டும் என்று கூவ தான் முடியும்.உயிர் பிழைக்கும் வாய்ப்புள்ள ,பல நாட்களாக கடலில் போராடி கொண்டிருக்கும் ,தத்தளித்து கொண்டிருக்கும் மீனவர்களை மீட்க மத்திய அரசு கடற்படை,விமான படை ,தொலைதொடர்பு சாதனங்கள் மூலம் முழுமூச்சில் ஈடுபட்டால் பலரை காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கை நியாயமான ஒன்று.
ஆனால் தேர்தல் பிரச்சாரத்தில் மூழ்கி இருக்கும் மத்திய அரசும்,மாநில அரசும் இதனை உணர்ந்தது போல தெரியவில்லை.பெரும்பான்மை மக்களும் மீனவர்கள் ஏன் நிவாரணத்திற்காக இவ்வளவு போராடுகிறார்கள் என்று கேட்கும் நிலையில் தான் இருக்கிறார்கள்.தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் தத்தளித்து கொண்டிருக்கும் மீனவர்கள் உயிர் பிழைக்கும் வாய்ப்புகள் வெகுவாக குறைய காரணம் என்பதை விளங்கி கொண்டால் போராட்டங்களுக்கு ஆதரவு தர,அரசை நிர்பந்திக்க பலரும் முன் வருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது

No comments:

Post a Comment